கடந்த மே 7- ஆம் தேதி அன்று ராஞ்சி விமான நிலையத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை இண்டிகோ விமான நிலைய ஊழியர்கள் ஏற விடாமல் தடுத்தனர். இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பலரும் விமான நிலையப் பணியாளர்களின் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இப்படிப்பட்ட நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், விசாரணைக்கு பின் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மாற்றுத் திறனாளி குழந்தையை ஏற்க மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்துள்ள விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம், இது போன்றவர்களை மனிதாபிமானதோடு கையாள, ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.