அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐக்கியநாடுகள் சபையில் பெண்களுக்கான 25-ஆம் ஆண்டு விழா நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெண் அமைச்சர்கள், பெண்கள் அமைப்பின் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். நேற்று (அக்டோபர்-2 ) நடந்த நிகழ்வில் இந்தியா சார்பில், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி கலந்துகொண்டார்.
நிகழ்வில் பேசிய ஸ்மிருதிராணி, “பெண்கள், குழந்தைகளுக்கான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பயணத்தில் பெண்களுக்கான முழு அதிகாரத்தை அங்கீகரிப்பதிலும் பாலின சமத்துவத்தை அளிப்பதிலும் இந்தியா உயர்ந்து நிற்கிறது. இந்த செயல்திட்டங்களுக்கான நடவடிக்கைகள், கரோனா நெருக்கடி காலக்கட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்காக மருத்துவம், சட்டம், காவல்நிலையம், பாதுகாப்பு காரணிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்குமான சிறப்பு மையங்கள் நாடு முழுமைக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கி அதனை மேம்படுத்த, ‘தேசிய ஊட்டச்சத்து திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த இரு வருடத்துக்குள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக இந்தியா உருவாகும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்க இந்திய சட்டங்கள் வழிவகுக்கின்றன. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன” என்று உறுதியளிக்கு வகையில் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி.