உலகின் மிகத் தூரமான பாதையில் விமானம் இயக்கி இந்திய விமானிகள் சாதனை படைத்துள்ளனர்.
வட துருவத்தின் வழியாக விமானம் இயக்க திறமையும், அனுபவமும் வேண்டும் என்கிற நிலையில், வட துருவத்தின் வழியாக சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு 16,000 கிலோ மீட்டர்கள் பறந்து பெண் விமானிகள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம், சான் பிரான்சிஸ்கோ மற்றும் பெங்களூருக்கு விமான சேவையைத் தொடங்கும் விதமாக, இந்தியப் பெண் விமானிகள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இந்த விமானிகள் குழுவில் ஒருவரான கேப்டன் சோயா அகர்வால், இளம்வயதில் 'போயிங்' ரக விமானத்தை இயக்கிய பெண் விமானி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனையை நிகழ்த்திய விமானிகள் குழுவிற்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "நினைவிற்கொள்ளத்தக்க, கொண்டாடத்தக்க ஒரு கணத்தில் இருக்கிறோம். இந்திய சிவில் பெண் விமானிகள், வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள். சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வட துருவத்திற்கு மேலே பறந்து, பெங்களுருவில் தரையிறங்கியதற்கு கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர் மற்றும் கேப்டன் சிவானி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.
"வட துருவத்தின் வழியாக சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருவுக்கு, ஏர் இந்தியாவின் மிக நீண்ட விமானப் பயணத்தை நிறைவு செய்த அனைத்துப் பெண்கள் காக்பிட் குழுவினருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.