Skip to main content

இந்தியாவில் சதமடித்த ஒமிக்ரான்; எச்சரிக்கை விடுக்கும்  ஐசிஎம்ஆர் !

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

icmr

 

உலகை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய லாவ் அகர்வால், "உலகின் 91 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சமூக பரவல் ஏற்பட்டால் டெல்டா பரவலை  ஒமிக்ரான் பரவல் மிஞ்சும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செயல்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா, "இது அத்தியாவசியமற்ற பயணங்கள், பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டிய நேரம். கொண்டாட்டங்களை குறைத்துக்கொள்வது முக்கியம். கரோனாவுக்கு எதிரான ஆன்டி-வைரஸ் மாத்திரைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். நோய் கண்டறியப்படுவதற்கு முன்பே, இந்த மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்று கண்டறிந்துள்ளோம். இந்த நேரத்தில் இந்த மாத்திரைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவியல் ரீதியான தரவுகள் பெரிய அளவில் கூறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக தரக்கூடாது; ஐ.சி.எம்.ஆர். எச்சரிக்கை

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Do not over-prescribe antibiotics; ICMR alert

 

மக்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றுக்கே ஆன்டிபயாடிக் மருந்தினை மருத்துவர்கள் தரக்கூடாது என்று மருத்துவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

 

ஆன்டிபயாடிக் மருந்துகள் உலகம் முழுவதும் மருத்துவர்களால் அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. உலகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் மக்கள் இந்தியாவில் அதிகளவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் கார்பெனம் எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்து அதிகமான மக்களுக்கு பலனளிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

 

இந்நிலையில், ஆன்டிபயாடிக் என்று அழைக்கப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரலாம்.

 

லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்து தருவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவாக, ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை கொண்ட நோயாளிகளுக்கும் வழங்கலாம்.

 

பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் தீவிரநிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், சமூக அளவிலான நிமோனியா பாதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப் பரிந்துரைக்கப்படுகிறது.

 


 

Next Story

இந்தியாவில் ஒமைக்ரான் XE  தொற்று உறுதி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

 Omicron XE infection confirmed in India!

 

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் வைரஸ் என்றும், சீனாவில் இந்த புதிய வகை தொற்று பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE  உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.