Skip to main content

மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் மோடிக்கு விருதா? பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு அறிஞர்கள் எதிர்ப்பு!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

பில்கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலிந்தா கேட்ஸ் ஆகியோர் பெயரில் ஒரு அறக்கட்டளை இயங்குகிறது. உலக அளவில் “அனைத்து உயிர்களும் சமம்” என்ற கோட்பாடுக்கு ஏற்ப பாடுபடுகிறவர்களுக்கு “குளோபல் கோல்கீப்பர் விருது” என்ற பெயரில் ஆண்டுதோறும் ஒரு விருதை இந்த அறக்கட்டளை வழங்குகிறது. இந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு இந்த விருதை வழங்க முடிவு செய்திருக்கிறது.


தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், இந்த முடிவை திரும்பப்பெறும்படி பில்கேட்ஸ் கேம்பிரிட்ஜ் அறிஞர்களும், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 70- க்கும் மேற்பட்டோர், கேட்ஸ் அறக்கட்டளைக்கு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தில், மோடியின் ஆட்சியில் தொடர்ந்து மனித உரிமைகள் நசுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளையும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்புணர்வுடன் கூடிய குற்றங்களையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


சமூகநல ஆர்வலர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறார்கள். அறிவுஜீவிகளின் எழுத்துகள் தணிக்கை செய்யப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது. மோடி அரசு இந்து தேசிய கோட்பாட்டை தழுவியிருக்கிறது. அந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அசாமில் 19 லட்சம் பேரின் குடியுரிமையையும் பறித்திருக்கிறது.

INDIA PRIME MINISTER NARENDRA MODI USA BILLGATES AWARD

 

அதுமட்டுமின்றி, காஷ்மீரில் 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, தகவல் தொடர்புகளை முற்றாக துண்டித்திருக்கிறது. வீட்டுச் சிறை, கைது நடவடிக்கை என்று காஷ்மீர் மக்களை உலகத்திடமிருந்து தனிமைப் படுத்தி வைத்திருக்கிறது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு என்ற பேரில் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டிருக்கிறது. இதன்மூலம் 19 லட்சம் மக்கள் குடியுரிமையை இழந்திருக்கிறார்கள். அவர்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியைப் பற்றி மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கொஞ்சம்கூட கவலைப்படாமல், குடியுரிமை பறிக்கப்பட்டவர்களை கரையான்கள் என்று இழிவுபடுத்தியிருக்கிறார்.

 

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா பல மனித உரிமை மீறல்களை திசைதிருப்பும் வகையில் வெற்று விளம்பரங்களால் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக நல மாற்றம் என்பரதைத் தாண்டி விளம்பரங்கள்தான் அதிகரித்திருக்கிறது. இதுவரை வெறும் கைகளால் மலம் அள்ளும் நடைமுறையையும், சாக்கடைக்குழிக்குள் இறங்கிச் சுத்தம் செய்வதையும் மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் கூடிய கேட்ஸ் அறக்கட்டளை, மோடியின் தலைமையிலான இந்தியாவில் நிகழும் வன்முறைகள், அச்சுறுத்தல்கள், மக்கள் மத்தியில் நிலவும் அச்சம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு மோடிக்கு விருது வழங்க முடிவு  செய்திருப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்