பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “ஜனநாயக நாடான இந்தியாவை மெல்ல மெல்ல சர்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் ஒரு சூழ்ச்சியாகும். தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் ஒருதலைபட்சமாக இவ்வளவு பெரிய முடிவை எப்படி எடுத்தீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய மத்திய அரசு அமைத்த குழுவில் மாநில அரசுகள் சார்பில் யாரும் இடம் பெறவில்லை.
கடந்த காலத்தில் 3 குழுக்கள் மூலம் ஆராயப்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிராகரிக்கப்பட்டது. மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி இடம் பெறாதது திகைப்பை ஏற்படுத்துகிறது. 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அனைத்துத் தேர்தல்களையும் நடத்த தேர்தல் ஆணையம் செலவு செய்த தொகை 5 ஆயிரத்து 500 கோடியாகும். இந்த 5,500 கோடி என்பது மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் ஒரு பகுதியாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதை பாஜக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. 2014 முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு 436 இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன.
பாஜக அரசின் அதிகார பேராசை, அரசியலை சீர்குலைத்து கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே பலவீனமாக்கி விட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற திட்டங்கள் ஜனநாயகம், அரசியலமைப்பை சீர் குலைக்கும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் உள்ள நிலையில் அவர்களின் எதிர்காலத்தை ஒரே நேரத்தில் தீர்மானிக்க முடியாது. பாஜகவின் தவறான ஆட்சியில் இருந்து விடுபட 2024 ஆம் ஆண்டு மட்டுமே மக்களுக்கு ஒரே தீர்வு ஆகும்” என தெரிவித்துள்ளார்.