ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அதிக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. தற்போது, அம்மாநிலத்தை சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் கீழ்த்தர செயல்களில் இந்த அரசு ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும், சந்திரபாபு நாயுடுவை எச்சரிப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் ஆட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது அவருக்கு இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த சமாஜ்வாதி மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது, “புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்காமல் இருந்திருந்தால் எனக்கு உண்மை தெரிந்திருக்காது. அதிகாரத்தில் இருப்பவர்கள் எளிமையைக் கடைபிடிக்க வேண்டும், மற்றவர்களை கவனிக்க வேண்டும், அவர்களின் உயிரைப் பறிக்கக் கூடாது” எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி கூறியதாவது, “எதிர்க்கட்சித் தொண்டர்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த ஆந்திராவுக்கு சிறப்புக் குழுவை அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.