நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தங்களுக்கான ஆதரவை பெருக்கி வருகின்றன. மேலும், தொகுதி வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடத்தி வருகின்றன. இந்தியா கூட்டணியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவும் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, “மோடிக்கு குடும்பம் இல்லை” என்று கூறி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. மேலும், பா.ஜ.க தலைவர்கள் பலர் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தங்களது பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என்று மாற்றி எதிர்வினையாற்றி வந்தனர்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று (09-03-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், லாலு பிரசாத் யாதவ்வின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இத்தகைய கோஷங்களை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அதனால், நமக்கு எந்தவித பயனும் இல்லை. இதுபோன்ற கோஷங்கள், எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறது. மோடியின் சொந்த வாழ்க்கையை தாக்கி, வழிமறிக்க ஆளில்லாத கோல் போஸ்டை அவருக்கு கொடுத்துவிட்டோம். அதை அவர் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் 140 கோடி மக்கள் தனது குடும்பம் தான் என்று பதிலடி கொடுத்துவிட்டார். இப்போது நம்மிடம் அதற்குப் பதில் இல்லை” என்று கூறினார்.