புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியத்துக்கு உட்பட்ட ஆந்திராவில் உள்ள ஏனாம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கொலப்பள்ளி அசோக் ஸ்ரீநிவாஸ். இவர் புதுச்சேரி முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றவர்.
முதலமைச்சர் ரங்கசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றதால் தனது தொகுதிக்கு எந்த விதமான நலத்திட்டங்களும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் தொகுதி முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதாகவும், எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் செயல்படுத்தாததை கண்டித்தும் கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் தொகுதிக்குச் சென்றிருந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து சமரசம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சந்திக்காமல் புதுச்சேரிக்கு திரும்பி உள்ளார். அதேசமயம் நேற்று மாலை முதல் சட்டமன்ற உறுப்பினரின் உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வருகிறது. மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். போராட்டத்தைக் கைவிட்டு மருத்துவமனைக்கு வரும்படி மருத்துவர்கள் கூறி இருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அசோக் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தனது போராட்டம் தொடரும் எனச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நான்கு நாட்களாக தொடரும் அசோக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தால் ஏற்பட்ட அவரது உடல்நிலை பாதிப்பு அவருடைய ஆதரவாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.