புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரம் வரை 10-க்குள்தான் இருந்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக கரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. புதுச்சேரி கதிர்காமம் கரோனா அரசு சிறப்பு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காரைக்காலில் ஒருவரும், மாஹேயில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வடமங்கலம், குருமாம்பேட், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர்க்கு புதியதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இதனால் புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உள்ள நிலையில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே, “ ஊரடங்கு தளர்வு காரணமாக மார்க்கெட்டுகளுக்கும், அலுவலகங்களுக்கும் மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். கரோனா தொற்று பரவுவதை தடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது. இதனால் சமூக இடைவெளி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியிலிருந்து வருபவர்கள் புதுச்சேரி மக்களுடன் கூடி கலந்துவிட்டனர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது. மத்திய அரசு 12 நோயாளிகள் உள்ள பகுதி அல்லது ஒரு மாவட்டத்தில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 80 சதவிகிதத்தினர் எந்த பகுதியில் உள்ளனரோ அந்த பகுதியை சிவப்பு மண்டலம் பகுதியாக அறிவிக்க கூறியுள்ளது. இவை இரண்டிற்கும் புதுச்சேரி வருவதால் புதுச்சேரி சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது. எனவே வெளியிலிருந்து வருபவர்களிடம் தொடர்பு கொள்ளாத வகையில் தனித்து இருக்க வேண்டும். காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனாவுக்கான சிறு அறிகுறிகள் இருந்தாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனவே புதுச்சேரி மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்'' என்று சுகாதாரத்துறை இயக்குனர் பிரசாத் குமார் பாண்டா, இயக்குனர் மோகன் ஆகியோர் கூறியுள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு இருந்த நிலையில் புதுச்சேரியில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஊரடங்கு தளர்வு, கோயம்பேட்டிலிருன்து வந்தவர்கள், வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள், புதுச்சேரி வாசிகள் அண்டை மாவட்டங்களில் புழங்குவது போன்றவற்றால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிப்பதில் கெடுபிடி காட்டப்படுகிறது. மேலும் ஊரடங்கு தளர்வுகளை கட்டுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.