
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், போட்டி நுழைவுத் தேர்வுகளுக்காக ராஜஸ்தானில் உள்ள கோட்டா பகுதியில் இருக்கும் பயிற்சி மையங்களில் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு படித்த பல மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று தலைசிறந்த கல்லூரிகளில் சேர்ந்திருந்தாலும், சில மாணவர்கள் மன அழுத்ததாலும், படிக்க முடியாததாலும் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால், கோட்டா பகுதியில் படித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், மருத்துவப் படிப்பிற்காக கோட்டா பயிற்சி மையத்தில் தங்கிப் படித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பீகார் மாநிலம், நாளந்த மாவட்த்தைச் சேர்ந்த ஹர்ஷ்ராஜ் சங்கர் (17) என்ற சிறுவன், நுழைவுத் தேர்வுக்காக கடந்தாண்டு ஏப்ரல் முதல் கோட்டா பயிற்சி மைய விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவரது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக, அங்கிருந்த மற்ற மாணவர்கள், பலமுறை கதவை தட்டியுள்ளனர். அதற்கு, ஹர்ஷ்ராஜ் சங்கர் பதிலளிக்காததால், விடுதி கண்காணிப்பாளர் வந்து அறை கதவை உடைத்துள்ளார். அங்கு, ஹர்ஷ்ராஜ் சங்கர், தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இதனை கண்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து வந்த ஹர்ஷ்ராஜ் சங்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என்றாலும் புத்தக அலமாரியில் ‘மன்னிக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை மட்டும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் மாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘கோட்டாவில் எங்கள் குழந்தைகளை படிக்க விட்டுவிட்டு, அவர்களின் உடல்களை திரும்ப எடுத்துச் செல்வது மாநில அரசுக்கு விழுந்த அறை. மாநில அரசு இந்த பிரச்சனையை தீர்த்து, எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும்” என்று வேதனையோடு தெரிவித்தார். கோட்டா பயிற்சி மையத்தில் இருந்து கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.