Skip to main content

'நேர்மையானவன் என மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும்' -அதிர்ச்சி முடிவு எடுத்த கெஜ்ரிவால்

Published on 15/09/2024 | Edited on 15/09/2024
'If people think I am honest, let them vote for me again' - Kejriwal made a shocking decision

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

மேலும் அந்த ஜாமீன் உத்தரவில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதோடு ஜூன் 2ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 26ஆம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்தது.

அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக மீண்டும் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்த இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நான் நேர்மையானவன் என மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன். நான் நேர்மையானவன் என மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும். நவம்பரில் மகாராஷ்டிரா மாநில பேரவை தேர்தலுடன் சேர்ந்து டெல்லிக்கும் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பிறகுதான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வேன்' என கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

சார்ந்த செய்திகள்