ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஆலைக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ ஆதரவு தெரிவிக்கவில்லை என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஸ்டெர்லைட் குறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ், காப்பர் உருக்காலை விஷயத்தில் நான் ஒரு நிபுணர் அல்ல. ஆனால் இந்தியா மிகப்பெரிய அளவில் காப்பர் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது எனக்கு தெரியும்.
நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என அவர் தெரிவித்திருந்தார். ஜக்கிவாசுதேவின் இந்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில், தனது கருத்து சர்ச்சை ஏற்படுத்தியதை அறிந்த ஜக்கி வாசுதேவ், மீண்டும் ஒரு கருத்தை டிவிட்டரில் வெளியிட்டார். அதில், ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஆலைக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.
சுற்றுப்புற பாதிப்பு தொடர்பான விதிமீறல்களை சட்டப்படி அணுக வேண்டுமே தவிர பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், வணிகத்தை மூடுதல் உள்ளிட்ட செயல்கள் தேச நலனுக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.