Skip to main content

மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர் - போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம்!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

human sacrifice

 

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியில் வசித்து வருபர்கள் பத்மஜா மற்றும் புருஷோத்தம் நாயுடு. இதில் புருஷோத்தம் நாயுடு கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். மனைவி பத்மஜாவும் முதுகலை வரை படித்துள்ளார். இந்தநிலையில் நேற்று (24.01.2021) இரவு இவர்களது வீட்டிலிருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவ்வீட்டில் சோதனை செய்தனர்.

 

போலீசார் சோதனையில், பத்மஜா மற்றும் புருஷோத்தம் நாயுடு ஆகியோரின் இரண்டு மகள்களும் சிவப்புத் துணி போர்த்தப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு மகள்களில் ஒருவர் பூஜை அறையிலும், இன்னொருவர் அறைக்கு வெளியிலும் பிணமாக கிடந்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து பத்மஜா, புருஷோத்தம் நாயுடு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் தங்கள் மகள்களை நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். தங்கள் மகள்களை அடித்துக் கொன்றுள்ள அவர்கள், மகள்களை மீண்டும் உயிர்ப்பிக்க அமானுஷ்ய பூஜைகள் செய்ய அனுமதிக்குமாறு போலீஸாரிடம் கேட்டுள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதுகுறித்து ஆந்திரா போலீசார், முதற்கட்ட விசாரணையின்போது, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஒரு கதையை கூறி, தங்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டு, திங்கள்கிழமை காலை திரும்பி வந்து தங்கள் மகள்களை உயிருடன் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள். தங்கள் மகள்களை மீண்டும் உயிர்ப்பிக்க சில அமானுஷ்ய பூஜைகள் செய்ய சிறிது நேரம் ஒதுக்குமாறு அவர்கள் எங்களிடம் கேட்டார்கள்" என தெரிவித்துள்ளனர்.

 

மேலும் போலீஸார், “கடந்த சில ஆண்டுகளாக தங்கள் வீட்டில் சில அற்புதங்கள் நடப்பதாக இந்த ஜோடி எங்களிடம் கூறியது. கலியுகம் ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவடையப் போகிறதென்பதால், திங்களன்று சத்ய யுகத்தின் தொடக்கத்தில் அவர்களுக்கு மறுபிறப்பு கிடைக்கும் என்பதால், மகள்களை பலியிடுமாறு ஒரு தெய்வீகச் செய்தி கிடைத்ததாக அவர்கள் கூறினர். தீய சக்திகள் வெளியேறிய பிறகு வீடு சுத்தம் செய்யப்பட்டதால் எங்கள் காலணிகளை வெளியே விடும்படிக்கூட அவர்கள் கேட்டார்கள்" என தெரிவித்துள்ளனர்.

 

நன்கு படித்த பெற்றோர்களே, மகள்களை நரபலி கொடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்