ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் வெளியானது குறித்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது ஊடகங்களில் வெளியான ஆதாரங்கள் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டன என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆதாரங்களை வெளிகொண்டுவந்த இந்து பத்திரிகை குழும தலைவர் என்.ராம் இது பற்றி கூறுகையில், "உச்சநீதிமன்றத்தில் நடந்தது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஆவணங்களை வெளியிட்டது, வெளியிட்டதுதான். அவை நம்பகத்தன்மை வாய்ந்த ஆவணங்கள். இந்த ஆவணங்களை மத்திய அரசு மூடி மறைத்தோ அல்லது முடக்கியோ வைத்திருந்தது.
எனவே, பொதுநலன் கருதி இந்த ஆவணங்களை வெளியிட்டோம். பொதுநலன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு முக்கியமான விவகாரங்களையும் புலனாய்வு இதழியல் மூலமாக வெளியிடுவது பத்திரிகைகளின் கடமை. அரசியல் சட்டப்படியும், தகவல் அறியும் உரிமை சட்டப்படியும் இந்த உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆதாரங்களை எங்களுக்கு வழங்கியது யார் என மத்திய அரசு கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது. ஆனால் நாங்கள் அதனை சொல்ல மாட்டோம். அவர்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்கின்படி அவர்கள் பற்றிய ரகசியங்கள் காக்கப்படும். மேலும் இந்த விவகாரத்தில் நாங்கள் ஏதும் பேச விரும்பவில்லை. நாங்கள் வெளியிட்ட ஆதாரங்கள் பேசும்" என கூறினார்.