நாளை (10/02/2022) உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதனையொட்டி, சுமார் 50,000 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை (09/02/2022) காலை 07.00 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 06.00 மணி வரை நடைபெறவிருக்கிறது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் 50,000 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
குறிப்பாக, முசாஃபர் நகர், மீரட் அலிகார் ஆகிய இடங்களில் அதிகளவில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட தேர்தலில் ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகள் அடங்கியுள்ளன. மொத்தம் 680 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 2 கோடியே 20 லட்சம் பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக, வாக்குச்சாவடிகள் முழுவதிலும் கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.