பஞ்சாப் மாநிலத்தில் உட்கட்சி பூசல் பெரிதானதையடுத்து, அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங், தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக்கொண்டார். சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக்கொண்ட சில நாட்களில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்த சித்து பதவி விலகுவதாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதினார்.
இது காங்கிரஸில் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் சித்துவின் பதவி விலகலை காங்கிரஸ் தலைமை இதுவரை ஏற்கவில்லை. இந்தச் சூழலில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னியை சித்து விமர்சிக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சித்து, காங்கிரஸ் தொண்டர்களைத் தலைமை தாங்கி உத்தப்பிரதேசத்தில் வன்முறை நிகழ்ந்த பகுதியான லக்கிம்பூருக்கு அழைத்து சென்றார். அங்கு செல்வதற்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் சித்து தனது ஆதரவாளர்களான அமைச்சர் பர்கத் சிங் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் செயல் தலைவர் சுக்விந்தர் சிங் டேனி ஆகியோருடன் முதல்வர் சரண்ஜித் சன்னிக்காக காத்திருக்கிறார். அப்போது தாங்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதாக சித்து தெரிவிக்கிறார். அப்போது பர்கத் சிங், சரண்ஜித் சன்னி இரண்டு நிமிடங்களில் வந்துவிடுவார் என கூறி சித்துவை சமாதானப்படுத்த முயல்கிறார். தொடர்ந்து சுக்விந்தர் சிங் டேனி, போராட்டம் வெற்றிகரமாக அமையும் என்கிறார்.
அதற்கு சித்து, ''வெற்றி இப்போது எங்கே இருக்கிறது?. அவர்கள் பகவந்த் சித்துவின் (சித்துவின் தந்தை) மகனை வழிநடத்த அனுமதித்திருந்தால், நான் அவர்களுக்கு வெற்றியைக் காண்பித்திருப்பேன் ... காங்கிரஸ் இறக்கும் நிலையில் உள்ளது. அவர் ( சரண்ஜித் சன்னி) 2022-ல் காங்கிரஸை மூழ்கடிப்பார்" எனவும் கூறுகிறார்.
இந்த வீடியோ தற்போது பஞ்சாப் காங்கிரஸில் அதிர்வலைகளை உண்டாகியுள்ளதுடன், கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும் சித்துவின் முதல்வர் ஆசையையும் இந்த வீடியோ வெட்ட வெளிச்சமாகியுள்ளது.