ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து, விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகையை தள்ளுபடி செய்வதாக ஹரியானா மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தள்ளுபடி செய்யப்படும் தொகையின் மதிப்பு ரூபாய் 4,750 கோடியாகும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில அரசு, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "விவசாயிகளின் நலன் கருதி" பயிர்கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ததாகவும், இந்த தொகையின் மதிப்பை ரூபாய் 5000 கோடியாக உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறுகிறது. அதனை தொடர்ந்து, பயிர்க்கடன் வட்டி தள்ளுபடி மூலம் சுமார் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளது.விரைவில் ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.