
கோப்புப்படம்
சேலத்தில் வீடு மாறி வந்த கொள்ளையர்கள் '30 லட்சம் ரூபாய் பணம் எங்கே?' என மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளவடக்குகாட்டில் வசித்து வருபவர் அமராவதி. இவர் தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல உறங்கிக் கொண்டிருந்த பொழுது சுமார் நள்ளிரவு ஒரு மணியளவில் நான்கு பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கொண்டு வீட்டுக்குள் புகுந்து கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
வீட்டில் இருக்கும் நகை, பணம் ஆகியவற்றை கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த ஏழரை சவரன் நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துள்ளனர். பின்னர் 'வங்கியில் இருந்து நேற்று எடுத்து வந்த முப்பது லட்சம் ரூபாய் எங்கே?' என கேட்டுள்ளனர். அதற்கு அமரவாதியோ 'என்னிடம் 30 லட்சம் ரூபாய் எல்லாம் இல்லை' என தெரிவித்துள்ளார். அப்பொழுது கொள்ளையர்கள் 'இது டீச்சர் வீடு இல்லையா? நாங்கள் வீடு மாறி வந்து விட்டோம்' என தெரிவித்துவிட்டு பறித்த நகையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து தப்பி ஓடினர். போகும்போது அமராவதியின் செல்போனை பறித்துக்கொண்டதோடு அவரை தனி அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பி ஓடினர். அடுத்தநாள் காலையான இன்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அமராவதியை மீட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.