குஜராத்தில் கோத்ரா கலவரத்தில் எதிரும் புதிருமாய் நேருக்கு நேர் எதிரியாக பார்த்துக்கொண்ட இருவர் தற்போது மதங்களையும், சச்சரவுகளையும் மறந்து நண்பர்களாக இணைந்துள்ளது அனைவர் நெஞ்சத்தையும் உருக்குவதாக உள்ளது.
அயோத்தியிலிருந்து சபர்மதி விரைவு ரயிலில் திரும்பிக்கொண்டிருத்த கரசேவகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட குஜராத் கலவரத்தின் சுவடுகளை அவ்வளவு எளிதில் எல்லோராலும் மறந்திருக்க முடியாது. 2002 ஆம் ஆண்டு இரு மதத்தினரும் கொலைவெறியுடன் தாக்கிக்கொண்ட குஜராத் கோத்ரா கலவர சம்பவம் நாட்டையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று.
இந்த கலவரத்தை அமைதிப்படுத்த அப்போது குராஜாத்தின் முதல்வராக இருந்த மோடி அரசு தவறிவிட்டதாக அரசின்மீதும், மோடி மீதும் விமர்சனங்கள் இருந்தது. அந்த கலவரத்தில் காவி நிற தலைப்பட்டையுடன் கையில் நீண்ட வாளுடன் கண்ணில் கொலைவெறி ததும்ப நின்ற இளைஞரும், அவரிடம் தன்னை கொல்லவேண்டாம் என கண்ணில் நீர் வழிய கைகூப்பி நின்ற இஸ்லாமிய இளைஞரின் புகைப்படமுமே ஒற்றை வரியில் மொத்த கலவரத்தின் தீவிரத்தை விளக்கிவிடும், அப்படியொரு உச்சகட்டத்தை தொட்டிருந்தது கோத்ரா கலவரம்.
அதற்கு மாறாக தற்போது அந்த புகைப்படத்தில் நேருக்கு நேர் எதிராக நின்ற இருவரும் மதங்களை தாண்டி மனிதம் பெற்று நல்ல நண்பர்களாக வலம் வருகின்றனர் என்பதுதான் இன்று நாட்டையே ஆச்சர்யத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ள செய்தி.
கலவரத்தில் காவி நிற தலைப்பட்டையுடன் கையில் வாள் ஏந்தி கொலைவெறியுடன் நின்ற இளைஞரின் பெயர் அசோக் மோர்ஜி. தற்போது இவர் ஒரு காலணி கடையை அமைத்திருக்கிறார். அந்த கடையை என்னைக்கொல்லவேண்டாம் என கெஞ்சிய குத்புதீன் அன்சாரியே திறந்து வைத்திருக்கிறார். அவருடன் கைகுலுக்கி புன்முறுவல் பூக்க தட்டிக்கொடுத்து அருகருகே நின்று நட்பு பாராட்டிக்கொள்வதுமான புகைப்படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு மதத்தை தாண்டியது மனிதம் என்பதையும் உணர்த்தியுள்ளது.