நிலவின் தென்துருவ பகுதியை ஆராயும் வகையில், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் ரூபாய் 1,000 கோடியில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15- ஆம் தேதி அதிகாலை 02.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். ‘கவுண்ட்டவுனும்’ தொடங்கிய நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி ஒரு மணி நேரத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலம் ஏவுவதை நிறுத்தியது இஸ்ரோ.
இதையடுத்து வரும் 22- ஆம் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்துடன், ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. அதற்கான 20 மணி நேரக் கவுண்டன் இன்று மாலை 06.43 மணியளவில் வெற்றிகரமாகத் தொடங்கியது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் நாளை மதியம் 02.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டதால் சந்திரயான் 2 பயணம் நாளை வெற்றிகரமாக அமையும் என இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியை ஆராயும், அதே போல் நிலவின் மேற்பரப்பு, தரைப்பரப்பு என முழுமையான ஆராய்ச்சியில் சந்திரயான் 2 விண்கலம் ஈடுபடவுள்ளது. மேலும் நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் ஈடுபடும் முதல் நாடாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.