Skip to main content

மத்திய அமைச்சரைச் சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள் குழு

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

A group of Tamil Nadu MPs to meet the Union Minister

 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பின் போது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் 24 வது கூட்டம் நேற்று நடைபெற்றது. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவர் எஸ்.கே.கல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஜெகாவத்தை காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவர் எஸ்.கே.கல்தர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் நடைபெற்ற விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

 

இதற்கிடையில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஜெகாவத்தை தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று சந்திக்க இருந்தனர். இருப்பினும் இந்த சந்திப்பு நேற்று நடைபெறவில்லை. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு மத்திய அமைச்சரை இன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர். இந்த கோரிக்கை மனுவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், தமிழகத்திற்கு உரிய நீரை  திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர். தமிழக எம்.பி.க்கள் குழுவில் திமுகவின் சார்பாக டி.ஆர்.பாலு, காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி, அதிமுக சார்பாக தம்பிதுரை, சந்திரசேகரன், மதிமுக சார்பாக வைகோ, விசிக சார்பாக திருமாவளவன், பாமக சார்பாக அன்புமணி, தமாகா சார்பாக ஜி.கே.வாசன், சுப்பராயன் (சிபிஐ), ஆர்.நடராசன் (சிபிஎம்), சின்னராஜ் (கொமதேக), நவாஸ் கனி (இ.யூ.மு.லீ) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்