இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளின் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாகச் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் ஆல்ஃபபெட் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் காணொளிக்காட்சி மூலமாக இன்று காலை ஆலோசனை மேற்கொண்டனர். இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பில், வேலை சூழலில் கரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஆறாவது ஆண்டு 'கூகுள் ஃபார் இந்தியா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சுந்தர் பிச்சை. இதில் பேசிய அவர், அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் 75,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பங்கு முதலீடுகள், கூட்டாண்மைகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம் எனவும், இது இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த நமது நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் எனவும் சுந்தர் பிச்சை இந்த மாநாட்டில் பேசுகையில் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "இந்தியர்களுக்கு தங்கள் சொந்த மொழியில் எளிமையாகத் தகவல்களை அணுக இந்த முதலீடுகள் மூலம் கவனம் செலுத்தப்படும். இரண்டாவதாக இந்தியாவின் தேவைகளுக்குப் பொருத்தமான கூகுள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல். மூன்றாவதாக, வணிகங்களை மேம்படுத்துவது. நான்காவது சமூக நலனுக்காக, சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு) ஐ மேம்படுத்துவது ஆகியவை இந்த முதலீட்டின் முக்கியமான நான்கு குறிக்கோள்களாகும்" எனத் தெரிவித்துள்ளார்.