பஞ்சாப் மாநிலத்தில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியின் செல்ஃபோனை பிடுங்கி, பைக்கில் தப்பமுயன்ற திருடர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு சாலையில், 15 வயது சிறுமி குசும் குமாரி, டியுஷன் முடித்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி திருடர்கள் இருவர், அந்தச் சிறுமியிடம் இருந்து ஃபோனை பிடுங்கினர். ஆனால், உடனடியாக சுதாரித்துக்கொண்ட சிறுமி, மொபைல்ஃபோனை பிடுங்கியவனை கீழே இழுத்து தள்ளிவிட்டாள். அவன் விழுந்ததும் சற்றும் எதிர்பாராமல், அந்தச் சிறுமையை தாக்கி தப்பிக்க முயன்றான். தாக்குதலுக்கு அஞ்சாத சிறுமி, தொடர்ந்து அவனிடம் போராடி, ஃபோனை மீட்டார். ஆனால், அதோடு விடாமல் அவனையும் பிடித்தார். அதற்குள் சுற்றி இருந்தவர்கள் வரத் தொடங்கினர். இதனால், அச்சமடைந்து பைக்கை ஒட்டிவந்தவன் அங்கிருந்து தப்பிவிட்டான். ஆனால், ஃபோனை பறித்தவன் மாட்டிக்கொண்டான்.
இந்நிலையில், காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பலர் சிறுமியின் இந்த துணிகர செயலைப் பாராட்டி வருகின்றனர்.