வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரியில் திடீரென்று இரண்டாவது முறையாக 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த புதிய விலை உயர்வு, முதல்கட்டமாக டெல்லி மெட்ரோ நகரத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் டெல்லியில் எல்பிஜி சிலிண்டர் விலை 769 ரூபாயாக அதிகரித்துள்ளது. புதிய விலை, திங்கள் கிழமை (பிப். 15) பகல் 12.00 மணி முதல் அமலுக்கு வருகிறது. இப்போதுள்ள நிலையில், விரைவில் இந்தியா முழுவதும் எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்நாட்டு உற்பத்தி திறன், சந்தை தேவை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு எல்பிஜி காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
நடப்பு பிப்ரவரியில் கடந்த 4- ஆம் தேதி, சமையல் காஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது திடீரென்று மீண்டும் 50 ரூபாய் விலை உயர்த்தி இருப்பது நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய விலைக்கு சிலிண்டர் வாங்கினாலும் அதில் கணிசமான தொகை மானியமாக நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை மானியத்துடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்தியன் ஆயில் அதிகாரிகள் கூறினர். அதேநேரம், வர்த்தக நோக்கிலான காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
வரும் காலங்களில் எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என கடந்த 4- ஆம் தேதியே எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.