சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநரும், இந்தியாவின் கரோனா மருந்து ஆராய்ச்சியின் மிக முக்கிய நபருமான ககன்தீப் காங், தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த ககன்தீப் காங், ரோட்டோ வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட இவர், இந்தியாவின் கரோனா மருந்து ஆராய்ச்சியில் சமீப காலமாகக் கவனம் செலுத்தி வந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், ஃபரிதாபாத்தின் ESIC மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இவரது தலைமையிலான குழு கரோனா மருந்து குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டது. ஆனால், மே மாதம் இவரது தலைமையிலான குழு கலைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பதவியை, தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ககன்தீப் காங் அறிவித்துள்ளார்.