கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.
அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.
இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.
மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது