உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் வந்தனா திவேதி. 26 வயதான இவர், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த 27 ஆம் தேதி இரவு வந்தனா தன்னுடைய காதலனுடன் சேர்ந்து ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறை எண் 306ல் தங்கியுள்ளார். ஆனால், அடுத்த நாள் காலை அந்த அறையில் தனியாக இருந்த வந்தனா சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகம் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், உடனடியாக ஹோட்டலுக்கு வந்த போலீசார், அறையில் இருந்த வந்தனாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புனே போலீசார், இளம்பெண் வந்தனா திவேதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வந்தனாவுடன் வந்த இளைஞர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் பதற்றத்துடன் ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும், அந்த இளைஞரின் பெயர் ரிஷப் நிகாம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மும்பை பகுதியில் தலைமறைவாக இருந்த ரிஷப் நிகாமை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது. அதில், போலீசால் கைது செய்யப்பட்ட ரிஷப் நிகாமும் ஹோட்டல் அறையில் கொலை செய்யப்பட்ட வந்தனாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இவர்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இதனிடையே, லக்னோவில் இருந்த வந்தனாவுக்கு புனேவில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை கிடைத்ததால் அவர் அங்கிருந்து புனேவிற்கு வந்துவிட்டார். ஆனால், அதில் ரிஷப் நிகாமிற்கு பிடிக்கவில்லை. தன் காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாள் என்று ரிஷப் நிகாம்மிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது வாழ்க்கையில் காலப்போக்கில் சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரிஷப்பிற்கும் வந்தனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில், வந்தனா தன்னை விட்டுட்டு வேறு நபரை காதலிக்கலாம் என ரிஷப் நினைத்துக்கொண்டிருந்தார். ரிஷப்பிற்கு வந்தனா மீது ஏற்பட்டிருந்த சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதன் நீட்சியாக, ரிஷப்பை குறிப்பிட்ட சில நபர்கள் சமீபத்தில் 2 முறை தாக்கியுள்ளனர். மேலும், வந்தனா தான் இந்த தாக்குதலுக்கு மூலகாரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ரிஷப்பிற்கு தன் காதலி வந்தனா மீது இருந்த கோபம், ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியுள்ளது.
இத்தகைய சூழலில், சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, ரிஷப்பிற்கும் வந்தனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரிஷப், தன் காதலி வந்தனாவை கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்தனாவை கொலை செய்யும் முடிவிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில், ஹிஞ்சேவாடி பகுதியில் மராத்தா சமூக இட ஒதுக்கீடு வெற்றி கொண்டாட்டம் நடந்துள்ளது. மேலும், அந்த பகுதி முழுக்க அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தது.
அப்போது, சுதாரித்துக்கொண்ட ரிஷப், அவர்கள் பட்டாசு வெடிக்கும் நேரம் பார்த்து வந்தனாவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதில், அந்த பெண்ணின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் 4 குண்டுகள் பாய்ந்து வந்தனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். அதே வேளையில், பட்டாசு சத்தம் காரணமாகத் துப்பாக்கியால் சுட்ட சத்தம் வெளியே கேட்காமல் இருந்தது" விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கொலையாளி ரிஷப்பிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, பெண் ஐடி ஊழியர் ஒருவர் தனது காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.