பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. மத்திய நிதி அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ள இவர், 2018இல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் கட்சி ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர் தற்போது திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த பிறகு பேசிய அவர், ஜனநாயக அமைப்புகள் பலவீனமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து யஸ்வந்த் சின்ஹா, "நாடு இப்போது அசாதாரண சூழலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் வலிமை, ஜனநாயக அமைப்புகளின் பலத்தில் உள்ளது. இப்போது நீதித்துறை உட்பட இந்த ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் பலவீனமாகிவிட்டன. வாஜ்பாயின் காலத்தில் பாஜக ஒருமித்தக் கருத்தை நம்பியது. ஆனால் இன்றைய அரசாங்கம் நசுக்குவதையும் வெற்றிபெறுவதையும் மட்டுமே நம்புகிறது. அகாலி தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டன. இன்று, பாஜகவுடன் யார் நிற்கிறார்கள்?" எனக் கூறியுள்ளார்.