கர்நாடகாவில் மாற்று சாதி இளைஞரை காதலித்த இளம் பெண்ணையும் அவரது காதலனையும் பெற்றோர் ஆணவக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் பீவினமட்டி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாத்தும் ராஜேஷ்வரியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி விஷ்வநாத்தையும் தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து விஸ்வநாத்தின் குடும்பத்தினர் அவரை கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் அவர்களது காதல் தொடர்ந்துள்ளது. இதனை அறிந்த பெண்னின் தந்தை விஸ்வநாத்தை செல்போனில் அழைத்து தனது மகளை திருமணம் செய்து வைப்பதாகவும் இதற்கு நடந்த பழைய விஷயங்களை மறந்துவிடுமாறும் கூறியுள்ளார்.
இதனை நம்பி வந்த விஸ்வநாத்தை, பெண்ணின் உறவினர்கள் தங்களது காரில் வந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின் காரிலேயே அவரை அடித்து தலையை உடைத்து கொலை செய்துள்ளனர். அதே சமயத்தில் பெண்ணின் உறவினர்கள் ராஜேஷ்வரியையும் தனியே காரில் அழைத்துச் சென்று காருக்குள்ளேயே கொலை செய்துள்ளனர்.
இதுமட்டுமின்றி இருவரது உடலையும் கிருஷ்ணா ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். மேலும் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரிக்கையில் உண்மைகள் வெளிவந்துள்ளன. மேலும் பெண்ணின் உறவினர்கள் மூவரை கைது செய்துள்ளனர். பெண்ணின் தந்தை தலைமறைவாக உள்ளார்.
நீச்சலில் தேர்ந்தவர்களைக் கொண்டு உடல்களைத் தேடியுள்ளனர் காவல்துறையினர். எனினும் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதும் முதலைகள் இருந்ததும் எங்களுக்குப் பின்னடைவாக இருந்தது என்று இது குறித்து விசாரித்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.