Skip to main content

மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...அதிர்ச்சியில் ப.சிதம்பரம் தரப்பு!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி  அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20- ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.
 

பின்னர் அவரை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் ப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி, அவரை திங்கள்கிழமை ஆஜர்படுத்துமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

former union minister p chidambaram case also file disposed in supreme court

 

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன் வந்தது. சிபிஐ ஏற்கனவே ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டதால், முன் ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறிய நீதிபதி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோல் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் தொடரப்பட்ட மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

former union minister p chidambaram case also file disposed in supreme court


 

மேலும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றமான டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகவும், ப.சிதம்பரம் தரப்பை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப. சிதம்பரத்தை இன்று மாலை ஆஜர்படுத்துகின்றனர் சிபிஐ அதிகாரிகள்.



 

சார்ந்த செய்திகள்