மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 70 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் 73 நாட்களாக தலைநகர் டெல்லியில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று (06.02.2021) நாடு தழுவிய' ஜக்கா ஜாம்' என்ற சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுக்க உள்ளனர்.
தொடர்ந்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில், கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நாளன்று நடத்தப்பட்ட 'ட்ராக்டர்' பேரணியானது வன்முறையில் முடிந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் இந்த வன்முறை நிகழ்வு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் எங்களுடைய போராட்டம் அமைதியான முறையிலேயே நீடிக்கிறது என்பதை வலியுறுத்தும் விதமாகவும், அரசின் கவனத்தையும் பொதுமக்களின் கவனத்தையும் தேசிய அளவில் ஈர்க்கும் விதமாகவும் அடுத்த கட்ட நடவடிக்கையாக விவசாய சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் 'ஜக்கா ஜாம்' எனும் நெடுஞ்சாலை சாலை மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்த 'ஜக்கா ஜாம்' சாலை மறியல் டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படவில்லை எனவும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் போராட்டத்தின்போது அவசரத் தேவைக்காக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் பெண்கள், குழந்தைகள் வரும் வாகனங்கள் ஆகியவை மறிக்கப்படாது. அதேபோல் அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வரும் வாகனங்களும் மறிக்கப்படாது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.