கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து கர்நாடகா மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன.
மைசூரு மாவட்டம் வருணா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில், மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் வி.சோமன்னா போட்டியிடுகிறார். இதனால் தற்போது வருணா தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. இருவரும் வருணா தொகுதியில் மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருணா தொகுதியில் சித்தராமையாவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வருணா தொகுதியில் போட்டியிடும் சித்தராமையாவை தோற்கடித்தால் தனது விவசாய நிலத்தை விற்று 50 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக வருணா தொகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். விவசாயியின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.