பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 2004 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சிக் காலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறைந்த விலைக்கு நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் அவரது மகனான பீகாரின் தற்போதைய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு பிரசாத்தின் மகளும் எம்.பி.யுமான மிசா பாரதி, சந்தா, ராகிணி ஆகியோரை விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது. அதன் பிறகு, கடந்த ஜூலை 3 ஆம் தேதி அன்று இந்த வழக்கில் சி.பி.ஐ. இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள குடியிருப்பு வீடு மற்றும் பாட்னாவில் உள்ள சொத்துக்கள் எனப் பல்வேறு இடங்களில் உள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து , பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவருடைய தந்தையும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இருவரும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை நேற்று (09-01-24) டெல்லியில் உள்ள பண மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 4,751 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், லாலு பிரசாத் யாதவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, அவருடைய மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ், குடும்ப நண்பரான அமித் கத்யால், ரயில்வே முன்னாள் ஊழியர் ஹிருதயானந்த் சவுத்ரி மற்றும் ஏ.கே.இன்போசிஸ்டம்ஸ், ஏ.பி.எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் என மொத்தம் 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு வருகிற ஜனவரி 16 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.