2024 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை கட்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறது. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய ஜி 23 தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சி 300 இடங்களை வென்று பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என தான் கருதவில்லை என கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய குலாம் நபி ஆசாத் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது; அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து பற்றி பல ஆண்டுகளாக நான் நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன். வேறு யாரும் பேசவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்நிலையில், என் கைகளில் இல்லாத விஷயத்தில் மக்களை மகிழ்விக்கும் வகையில் எதையும் கூறமாட்டேன்.
நமது நிலம் மற்றும் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதே மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் இந்த நேரத்தில், எனக்கு முதலமைச்சர் பதவி என்பது அர்த்தமற்றது. சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, அதன் தீர்ப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதுவரை ஜம்மு காஷ்மீரை சேராதவர்களுக்கு நமது வேலைகளும் நிலங்களும் செல்வதைக் கண்டு நாம் பொறுத்துகொண்டிருக்க முடியாது.
சட்டப்பிரிவு 370 குறித்து உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே முடிவு செய்ய முடியும். உச்ச நீதிமன்றத்தைத் தவிர, ஆளும் அரசுதான் அதுகுறித்து முடிவு செய்ய முடியும். தற்போதைய அரசுதான் அதை ரத்து செய்துள்ளது. எனவே, அவர்கள் அதை எப்படி மீண்டும் கொண்டுவருவார்கள்?. 2024 தேர்தலில் காங்கிரஸ் 300 எம்.பி.க்களுடன் ஆட்சி அமைக்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியாது. காங்கிரஸ் 300 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் இப்போதைக்கு அது நடக்கும் என கருதவில்லை.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.