இதுவரை எந்த இந்திய பிரதமருக்கும் கிடைக்காத வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரே மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என்று சொல்லியிருக்கிறார். இதை ஏற்காத யாரும் இந்தியரே இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்தார்.
அமெரிக்காவில் வாழும் இந்தியரில் ஒருபகுதியினர் பங்கேற்ற கூட்டத்தில் மோடியும் ட்ரம்ப்பும் கலந்துகொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமெரிக்காவில் வாழும் 30 லட்சம் இந்தியரின் வாக்குகளை குறிவைத்து குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பல்வேறு தந்திரங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் மோடியின் கூட்டத்தில் பங்கேற்ற ட்ரம்ப், இந்தியாவின் தேசத்தந்தையாக மோடியை பார்ப்பதாக கூறினார்.
இதை காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியாவுக்கு காந்தி மட்டுமே தேசத்தந்தை என்றும், வன்முறையையும், வெறுப்பு அரசியலையும், ஜனநாயகப் படுகொலையையும் நடத்தும் மோடி எப்படி தேசத்தந்தை ஆகமுடியும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமெரிக்காவில் மோடி பங்கேற்ற கூட்டத்துக்கு வெளியிலேயே அவருடைய ஆட்சியின் லட்சணங்களை எதிர்த்து மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில்தான் அமைச்சர் ஜிதேந்திரா சிங், ட்ரம்ப் கூறியதை ஏற்காதவர்கள் இந்தியர்களே அல்ல என்றும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.