கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜகவை வீழ்த்தி இழந்த ஆட்சியை காங்கிரஸ் கட்சி மீட்டெடுத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தின் முதல்வர் யார் என்று போட்டி நிலவி வருகிறது. சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரின் ஆதரவாளர்களும் தங்களது தலைவர்தான் முதல்வராக வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்
இதனிடையே பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரையும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கார்கே இருவரிடமும் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரும் ராகுல் காந்தியை நேற்று அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இப்படி பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு சித்தராமையாவிற்கு முதல்வர் பதவி வழங்கப்படுவதாகவும், சிவகுமாருக்கும் 6 முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படுவதாகவும் ராகுல் கூறியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூரு செல்வதற்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகுமார், கட்சியின் நலனுக்காக சித்தராமையா ஏன் முதல்வராகக் கூடாது என்றும் அவர் முதல்வராவதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும் அந்த பேட்டியில் தான் துணை முதல்வர் பொறுப்பேற்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், நாளை மறுநாள் (20.05.2023) பெங்களூருவில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று இரவு மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் முதல்வர் குறித்து அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.