நமது நாட்டின் தேசிய விலங்காக வங்கப் புலி இருக்கிறது. எண்ணிக்கை அளவில் நாளுக்கு நாள் இந்தப் புலிகள் குறைந்து கொண்டே வருகின்றன. பருவநிலை மாற்றங்கள், வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களை இதற்காக சொல்கிறார்கள்.
சமீபத்தில் கோவா மாநிலத்தில் உள்ள மாதேயி வனவிலங்குகள் காப்பகத்தில், ஒரு பெண் புலியும் அதன் மூன்று குட்டிகளும் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தன. இதுதொடர்பான விசாரணையில், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது. தங்களது பசுவை இந்தப் புலிகள் கொல்வதால்தான் விஷம் வைத்தோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 05-ந்தேதி கூடிய கோவா சட்டப்பேரவையில், புலிகள் கொல்லப்படுவது தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சர்ச்சில் அலீமா பேசுகையில், “பசுக்களைக் கொன்றதற்கு, மாட்டிறைச்சியை சாப்பிட்டதற்காக நமது நாட்டில் மனிதர்கள் கொல்லப்படும் போது, ஏன் இதே காரணத்திற்காக புலிகளுக்கு தண்டனை வழங்கக்கூடாது” என்று அவர் கேள்வியெழுப்பினார். மேலும், ஏழ்மையான குடும்பங்கள் பலவும் இதுபோன்ற வாழ்வாதாரங்களை நம்பியே இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, முதல்வர் பிரமோத் சாவந்த், கால்நடைகளை இழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததில் இருந்தே, பசுவின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவது பலமடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.