வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, பாரத் என்ற பெயருக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நாட்டின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக பரவும் தகவல் வதந்தி என்று தெரிவித்திருந்தார். பின்னர், நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி, இந்தியாவிற்கு பதில் பாரத் எனப் பெயரிடப்பட்ட பெயர்ப் பலகையைப் பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தியாவிற்கு பாரத் என்ற பெயரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று பாஜக எம்.பி திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேற்கு வங்கத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், கொல்கத்தாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களின் சிலைகளையும் அகற்றுவோம். இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படும். இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்” என்றார்.
இதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தனு சென், “எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு பயந்தே உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜக முயல்கிறது” எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.