கேரளா மாநிலம், கோழிக்கோடு பகுதியில் மனோரமா நாளிதழ் குழுமம் சார்பில் கலை மற்றும் இலக்கிய விழா நடைபெற்றது. அந்த விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திராவிட அரசியலில் இலக்கிய மற்றும் மொழி கூறுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது அவர், “மொழி திணிப்பிற்கு எதிராக திராவிட இயக்கம் கண்ட போராட்டத்தினாலே, பல்வேறு மாநில மொழிகளும் காப்பாற்றப்பட்டது. சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்க்க திராவிட இயக்கம் காரணமாக இருந்தது. முன்னர் மொழி அடிபாணியாமை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை அப்போதைய தேசியவாதிகள் பிரிவினைவாதமாக பார்த்தனர். இந்தி திணிப்புக்கு எங்களது எதிர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக இருக்கும் என அவர்கள் கருதினர். ஆனால், பல பத்தாண்டுகளுக்கு பிறகு, ஏற்பட்ட வரலாறு அது தவறு என்பதை நிரூபித்திருக்கிறது.
இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்க விரும்பும் தேசியவாதிகள் என கூறிக்கொள்பவர்கள் தான் உண்மையில் நாட்டின் ஒற்றுமைக்கு அபாயமாக உள்ள பிரிவினைவாதிகள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஆகவே, திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் மேற்கொண்ட போராட்டம், இந்தியாவின் பெரும்பான்மையான மாநில மொழிகள் இந்தி திணிப்பிற்கு இரையாகாமல் காப்பாற்றியிருக்கின்றன என்ற பெருமிதத்துடன் உங்கள் முன் நிற்கிறேன். இன்றைக்கு இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்று சொன்னால், அதற்கு மிகப்பெரிய காரணம் நாங்கள் சார்ந்திருக்கக் கூடிய திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொள்வதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். திராவிட இயக்கம், இந்தி திணிப்பை எதிர்த்ததே தவிர, தனிப்பட்ட முறையில் இந்தி மொழி மீது எந்தவித வெறுப்பும் கிடையாது” என்று கூறினார்.