புதிய மோட்டோர் வாகன சட்டதிருத்தத்தின்படி போக்குவரத்துக்கு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபாரதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் டெல்லியில் பஸ் ஓட்டுநர் ஹெல்மெட் போடவில்லை என கூறி ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. நொய்டா செக்டர் 18 பகுதியைச் சேர்ந்தவர் நிராங்கர் சிங். இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. பேருந்துகளைப் பள்ளிக்கு வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி நிராங்கர் சிங்கின் பஸ் ஓட்டுநர் ஹெல்மெட் அணியாமல் பஸ் ஓட்டியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரசீதை கண்டு குழப்பமடைந்த நிராங்கர் சிங், பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் இருந்தார் என்பதற்காக ரூ.500 அபராதம் எப்படி விதிக்க முடியும் என்று அதிகாரிகளிடம் அவர் கேட்டதற்கு, சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினார் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ஹெல்மெட் என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துசெல்லப்போவதாக நிராங்கர் சிங் தெரிவித்துள்ளார்.