டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை பாஜக தலைவர்கள் பலவிதத்திலும் மோசமாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். பல்கலைக்கழகத்திற்கு 2 ஆயிரம் மதுப்பாட்டில்களும், 3 ஆயிரம் காண்டம்களும் கண்டுபிடித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். எப்படித்தான் கேலி பேசினாலும், கேவலப்படுத்தினாலும், இந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சேர்வதற்குரிய திறமை அவர்களுக்கு கிடையாது. இங்கு அனுமதி கிடைப்பது எளிதல்ல. பல்கலைக் கழகத்தை கேலி பேசுவதாலோ, அங்கு படிப்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதாலோ, உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்துவிடாது. உங்களுக்கு பாதுகாப்புக் கிடைத்துவிடாது. உங்களுடைய அடிப்படைத் தேவைகளை கொடுத்துவிடாது என்று முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன் மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக காணாமல் போன நஜீப் என்ற மாணவரை கண்டுபிடிக்க முடியாதவர்கள், பல்கலைக்கழக குப்பைத் தொட்டியில் 3 ஆயிரம் காண்டம்கள் கிடைத்ததாக கூறியிருக்கிறார்ள். அவர்கள் எப்படி எண்ணினார்கள் என்று தெரியவில்லை என்றும் அவர் கிண்டலாக கேட்டார்.
2016- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாஜக எம்.பி. ஞானதேவ் அஹுஜா என்பவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைப் பற்றி மோசமான கருத்தை வெளியிட்டார். அப்போது, அங்கு, தினமும் 3 ஆயிரம் பீர் கேன்கள், 2 ஆயிரம் இந்திய மதுப்பாட்டில்கள், 10 ஆயிரம் சிகரெட் துண்டுகள், 4 ஆயிரம் பீடிகள், 50 ஆயிரம் எலும்புத் துண்டுகள், 3 ஆயிரம் காண்டம்கள், 500 கருக்கலைப்பு ஊசிகள் ஆகியவை கிடைக்கின்றன என்று கூறியிருந்தார். அதைத்தான் கன்னையா குமார் குறிப்பிட்டிருந்தார்.