
பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவருக்குக் கரோனா இருக்குமோ என்ற அச்சத்தால், சக பயணிகள், பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இணைந்து அப்பெண்ணைப் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசியதில் அப்பெண் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
கடந்த ஜூன் 15 ஆம் தேதி டெல்லியிலிருந்து ஷிகோகாபாத் செல்லும் உ.பி. சாலைவழிப் பேருந்தில் அன்ஷிகா என்ற 19 வயது பெண் தனது தாயுடன் பயணித்துள்ளார். அப்போது அவர் போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பேருந்தில் பயணித்த பயணிகள் அன்ஷிகாவுக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகமடைந்துள்ளனர். இதனையடுத்து இந்தத் தகவலைப் பேருந்து நடத்துநரிடம் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து அப்பெண்ணைப் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பெண் அடுத்த 30 நிமிடங்களில் சாலையிலேயே உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் 15 அன்று நடைபெற்ற இந்தச் சம்பவம் இதுவரை வெளிவராமல் இருந்த சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு டெல்லி மகளிர் ஆணையம் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ளது.