கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் டெல்லியில் நேற்று (24/02/2020) நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் வன்முறையை கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு இடையேயும் வடகிழக்கு டெல்லியில் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
டெல்லி வன்முறையில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. கலவரத்தில் தலைமை காவலர் ஒருவர், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் இறந்த நிலையில் 105 பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த கலவரத்தின்போது துப்பாக்கியால் சுட்ட ஷாருக் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இந்த வன்முறை தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் டெல்லி வடகிழக்கு பகுதியில் சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு இடையே மீண்டும் வன்முறை இன்று காலை ஆரம்பித்தது. ஒருவர் தரப்பை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அப்பகுதி எம்எல்ஏக்கள் இல்லத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.