டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்திருந்தது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறையும் மனிஷ் சிசோடியவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது மணீஷ் சிசோடியாவை நினைவு கூர்ந்தார். மேலும் மணீஷ் சிசோடியா சிறையில் இருப்பது குறித்து கூறுகையில் அரவிந்த் கெஜ்ரிவால் கண்கலங்கினர். அரவிந்த் கெஜ்ரிவால் கண்கலங்கிய நிகழ்வு அங்கு இருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.