டெல்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இரண்டாவது முறையாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி அமைச்சரவையின் நீர்வளத்துறை உள்ளிட்ட 14 துறைகளை கவனித்து வந்த அதிஷியை டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிஷி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், முதல்வரின் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகவும், முதல்வர் அதிஷியை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. இது குறித்து, டெல்லி முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுப்பணித் துறை அதிகாரிகள் குழு, டெல்லி முதல்வரின் இல்லத்துக்கு வந்து, முதல்வர் அதிஷியின் அனைத்து உடமைகளையும் முதல்வர் இல்லத்தில் இருந்து அகற்றியுள்ளது. பா.ஜ.கவின் உத்தரவின் பேரில் வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டது. அந்த இல்லத்தை,பா.ஜ.க தலைவர் ஒருவருக்கு ஒதுக்க துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா விரும்புகிறார்’ எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “கடந்த 27 ஆண்டுகளாக இங்கு வெற்றி பெறாத பா.ஜ.க, முதல்வர் இல்லத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு, மூன்று முறை தோல்வியடைந்து, இப்போது தேர்தலில் வெற்றி பெற முடியாததால், ஆம் ஆத்மி கட்சியையும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அழிக்க முயற்சிக்கின்றனர். இப்போது அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதால், அவர்கள், முதலமைச்சரின் இல்லத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்” என்று கூறினார்.