திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பாதயிக்கர என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பதூல். 19 வயதான பாத்திமா பதூலுக்கு அவரது பெற்றோர்கள் முஸ்தபா-சீனத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி மூர்க்க நாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பாத்திமா பதூலுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு முந்தைய நாள் பாத்திமா வீட்டில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மணப்பெண் பாத்திமா போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக உறவினர்கள், பெற்றோர்கள் பாத்திமாவை பெரிந்தலமண்ணாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் சிகிச்சை பலனின்றி மணப்பெண் பாத்திமா உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து அவரின் உடல் மலப்புரம் மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மணப்பெண்ணின் உயிரிழப்புக்கு நெஞ்சுவலியே காரணம் எனக் கூறப்பட்டாலும், முழுமையான பிரேதப் பரிசோதனை பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.