மத்திய பிரதேசத மாநிலம் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையான கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் நேற்று (08.11.2021) இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பிரிவில் இருந்த நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர்.
அந்தப் பிரிவில் இருந்த மேலும் 36 குழந்தைகள் அருகிலிருந்த மற்றொரு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்துக்கு ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம் என மத்திய பிரதேச மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறியுள்ளார்.
இதற்கிடையே தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியாதது மிகுந்த வேதனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு, தீ விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.