உத்தரப் பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் குழந்தைகளுக்காக அரசு காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் கண்காணிப்பாளராக பூனம் பால் என்ற பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அந்த குழந்தைகள் காப்பகத்தின் வளாகத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குழந்தைகள் வரிசையாகப் படுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த காப்பக கண்காணிப்பாளர் பூனம் பால், அங்கு படுத்திருந்த சிறுமியை செருப்பால் கொடூரமாக அடித்துத் தாக்குகிறார். கூடுதலாக அந்த அறையில், மற்ற ஆறு குழந்தைகளும் தனி படுக்கைகளில் படுத்திருப்பதாக அந்த காட்சிகள் காட்டுகிறது. செப்டம்பர் 4 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில், லக்னோவில் உள்ள மகளிர் நலத்துறையின் இயக்குநர், குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். அங்கு, காப்பக கண்காணிப்பாளர் பூனம் பால், குழந்தைகளைத் தகாத முறையில் நடத்தியிருப்பது உறுதியானது. மேலும் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து, காப்பக கண்காணிப்பாளர் பூனம் பால் இடை நீக்கம் செய்யப்பட்டார்.