இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தற்போது ஏற்பட்டு வருகிறது. மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 30 ஆயிரத்து 535 பேருக்கு கரோனா உறுதியாகிவுள்ளது. ஒரேநாளில் ஒரு மாநிலத்தில் இத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக, இதே மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஓரே நாளில் கரோனா பரவல் உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதேபோல் கடந்த வாரம் (மார்ச் 15 - 21) வரை 2.6 லட்சம் பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இதற்கு முந்தைய வாரத்தை விட 67 சதவீதம் அதிகமாகும். அந்த வாரத்தில் 1.55 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வளர்ந்து வரும் கரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக நிறுத்தியாகவேண்டும் என பிரதமர் மோடி ஏற்கனவே மாநில முதல்வர்களிடம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.